ப்ளாஸ் நியூஸ்
“த்தூ.... போடா''
கேமராவை நோக்கி துப்பினாள்.
அவமானம் அவளை தின்னது; சட்டென்று எகிறினாள்.
“எங்களை படம் பிடிக்கிறியே; நீயெல்லாம் மனுசனா?''
"உனக்கு அக்கா, தங்கச்சி இல்லையா? அவங்களுக்கு இந்த அவமானம் வந்தா என்னோட வலி உனக்குப்புரியும்''
ரமேஷ் பதட்டப்படமால் படம் பிடித்தான்.
அவனுக்கு இது முக்கியம். பிரபல நடிகை பிரேமா விபசார வழக்கில் கைது; மற்ற டி.வி.களை முந்தித்தருவது முக்கியம்; இது போன்றமிரட்டல்கள், சப்தங்கள் அவனுக்கு சாதாரணம்.
போலீஸ் வேனில் பிரேமாவை ஏற்றும் வரை படம் பிடித்தவன், சட்டென்று ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்து டி.விஸ்டேசனை நோக்கி விரைந்தான்.
“சபாஷ்டா ரமேஷ்''சில நிமிடங்களில் அவன் வீடியோ கேமராவில் பதிவான காட்சிகள் டி.வியில் ஒளிபரப்பானது.தமிழகம் முழுவதும் பிரேமாவை பற்றிய பேச்சாகவே இருந்தது.
“சரி... நான் புறப்படறேன்; இன்னிக்கி எனக்கு பொண்ணு பார்க்க போறோம்.
''ஸ்டேசனில் சொல்லிவிட்டு கிளம்பினான் ரமேஷ்.
ரமேஷ்... அந்த டி.வி. ஸ்டேசன் துவங்கியவுடனே வேலைக்கு சேர்ந்தவன்; காற்று போகாத இடத்திற்கும் அவன்கேமரா போகும்; ஒரு சம்பவம் பற்றி துப்பு கிடைத்த அடுத்த நிமிடம் அங்கிருப்பான்; கேமரா மின்னலாய் இயக்கும்;அதைவிட வேகமாய் டி.வி. ஸ்டேசன் வந்து சேரும்.
எப்படி இவனால் மட்டும் இது முடிகிறது?ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு அணுகு முறை...சாதாரண விஷயங்களை படம் பிடித்து அவனுக்கு சலிப்பான விஷயம்.பரபரப்பான செய்திக்காக கழுகாய் காத்திருப்பான்; நீ மூக்கு வேர்த்ததும் பிணம் தின்னி கழுகாய் பறப்பான்;கேமராவால் கொத்துவான்.
அடுத்தவர் அவமானம் அவனது புகழுக்கு மூலதனம்; பரபரப்பை விரும்பும் மக்கள் சைகாலஜி அவனுக்குஅத்துபடி.சங்கீதாவுக்கு இது பிடிக்காது.
“நீ நில்ல திறமசாலி; ஒத்துகிறேன். சட்டபடி பார்த்தால் இது தப்பில்லே; ஏத்துக்கிறேன். ஆனா இதுநீமூர்க்கத்தனம். அடுத்தவங்கள அழிக்கிற அரக்க குணம். அவசரப்பட்டு அடுத்தவங்கள ஏன்அவமானப்படுத்தனும்? எனக்கு பிடிக்கலே''
“ஜனங்களுக்கு பிடிக்கிதே?''
“ஜனங்களுக்கு நிதானம் தேவை; அவங்க புத்தி வளர நில்ல விஷயங்களை சொல்லுங்க; அது புண்ணியம். இப்பசெய்யறது வியாபாரத்துக்காக செய்யற கேமரா விபசாரம்''
“நல்லா பேசற; வக்கீலுக்கு படிச்சு இருக்கலாமல்ல?''
“வக்கீலுக்கு படிச்சிருந்தா, உங்கள பிடிச்சிருக்க முடியுமா? கம்ப்யூட்டர் ஆப்ரேட்டரா இங்க வந்ததால, உங்க காதலியா...
''மேற்கொண்டு பேச முடியாமல் வெட்கப்படுவாள் சங்கீதா.அவள் நல்ல அழகு; நல்ல வசதி; தெளிவானவள்.
“நல்லது நீமூடநம்பிக்கையானாலும் பின்பற்று; கெட்டது நாகரீகமாக இருந்தாலும் ஒதுக்கு''
சங்கீதாவின் பாலிசிக்கு இன்று பரீட்சை.
“நம்ம காதலிக்கிறது ஒரு பக்கம் இருக்கட்டும்; முறைப்படி பொண்ணுவந்து கேளுங்க''
ஒரு வார முன்பு அவளே சொன்னாள்.வீட்டில் ஒரு கும்பலே தயாராக இருந்தது.சங்கீதாவின் வீட்டிலும் சந்தோஷம்; மகளுக்கு திருமணம் ஆகிற மகிழ்ச்சி; தடபுடலாக ஏற்பாடு செய்துவைத்திருந்தார்கள்.
ரமேஷ் உறவுகளோடு உள்ளே நுழைந்தான்.காப்பி கொண்டு வந்த சங்கீதாவின் கண்கள் ரமேஷை தேடியது; அவனிடம் காப்பி கொடுத்து விட்டு அவள் நகர்ந்தபோது பேச்சு துவங்கியது.
எங்களுக்கு பொண்ணு பிடிச்சிருக்கு“எப்ப கல்யாணம்''துவங்கிய பேச்சுக்கிடையே புகுந்தாள் ரமேஷின் தங்கை.
“எனக்கு பிடிக்கல''
சட்டென்று நிசப்தம்;
எல்லோர் மனசிலும் வேகம்; கோபம்
“ஏன்?கோபமாக கேட்டான் ரமேஷ்.
ஹாலில் ஒரு மூ லையில் மாட்டியிருந்த புகைப்படத்தை காட்டினாள் அவள்.
அதைப் பார்த்ததும்... எல்லோரும் திடுக்ககிட்டு போனார்கள்.
விபச்சார வழக்கில் கைதான நடிகை பிரேமா சங்கீதாவின் தோள் மேல் கைப்போட்டு போட்டோவில் சிரித்துகொண்டிருந்தாள்.
“அதுவா அது எங்க அண்ணன் பொண்ணு; சினிமாவில் நடிச்சுட்டு வர்றா''
டி.வி. பார்க்காத சங்கீதாவின் அப்பா சொன்னார்.
“அவ சினிமாவில் மட்டுமா நடிக்கறா? சின்னப்பசங்ககூட அல்ல இருக்கறா''
“வசதியே அப்படித்தான் வந்தது போல இருக்கு''
பேச்சுகள் திசை மாறின.ரமேஷ் மவுனமாக இருந்தான்.
உள்ளே... சங்கீதா பொங்கி அழுதாள்.
“எந்திருச்சு வாடா; போகலாம்;''சட்டென்று கிளம்பினார்கள்.
ரமேஷின் பார்வையில்... ஒரு சிக்கலான குடும்பத்தில் சிக்காமல் தப்பித்த திருப்தி தெரிந்தது.
பத்துநாள்போயிருக்கும்; சங்கீதாவை பார்ப்பதை ரமேஷ் தவிர்த்தான்.வெளியே சுற்றுவான்; படம் பிடிப்பான்; ஸ்டேசனில் கொடுப்பான்; வேகமாய் கிளம்பி விடுவான்.
அன்று அயோத்தியா குப்பத்தில் கலவரம்; கேள்விப்பட்டு படம் பிடிக்க போனான்.அங்கே... திடீரென்று ஒரு கும்பல் இவனை சூழ்ந்தது.
“நீதானே அன்னக்கி எங்க குப்பத்து தலைவர பேட்டி எடுத்த? தாதாவா தலை நிமிர்ந்து இருந்தவர போலீஸ்பிடிச்சுட்டு போக உன்னோட பேட்டிதானே காரணம். உன்னால தானே இப்ப ஜெயில்ல கஞ்சி சாப்பிடறாரு; உன்னசும்மா விடமாட்டோம்''
அங்கிருந்த காரின் மேல் அவனை தூக்கிப்போட்டு கட்டிப்போட்டார்கள்.
“கொளுத்துங்கடா அவனை'' ஒருத்தன் பெட்ரோல் தேடி ஓடினான்; பெட்ரோல் வந்ததும் கார் மீதும் ரமேஷ் மீதும் ஊற்றினார்கள்; தீப்பட்டியை திறந்து தீக்குச்சியை எடுத்தபோது...
“நிறுத்துங்க'' ஒரு பெண் குரல் கேட்டது.கும்பல் வணங்கியது; விலகியது.
“அம்மா, உங்கப்பா ஜெயிலுக்கு போக இவன்தான் காரணம்'' கும்பலில் ஒருவன் சொன்னான்.
“அம்மா, இந்த நேரத்துல இங்க எதுக்கு வந்தீங்க? ஏரியாவே தகராறுல நெருப்பா கொதிக்குது''
“டேய், அம்மாவை யாராவது பத்திரமா வீட்டுல விட்டுட்டு வாங்க''
ஒவ்வொருவரும் பேசினார்கள்.
“அந்த ஆளை ஒண்ணும் பண்ணாதீங்க; அவுத்து விடுங்க'' கட்டளையிட்டாள்.
கட்டை அவிழ்க்க ஒருவன் காரின் மீது ஏற முயன்ற போது... தெருகோடியில் எதிர் கோஷ்டி வருவது தெரிந்தது.பயத்தோடு இறங்கினான்.“அம்மா, ஆபத்து உடனே புறப்படுங்க''கார் சாவியை அவளிடம் கொடுத்தார்கள்.
சட்டென்று காரில் ஏறிய அவள் எதிர் திசையில் காரை வெகு வேகமாக கிளம்பினாள்.ஹேய்... என்று பின்னால் துரத்தும் கும்பலும் அவள் அப்பாவின் கும்பலும் மோதும் சத்தம் தூரத்தில் கேட்டது.
அடுத்த சிக்னலில் கார் நின்றபோது அவளுக்கு பயம்; யாராவது பின்தொடர்கிறார்களா என்ற அச்சம்; மிரட்சியாக சிக்னல் விளக்கையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
“பரதேசி, என்ன கொடுமை செஞ்சானோ? ஒரு பொம்பள கார் மேல கட்டி கொண்டு போறான்னா எந்தளவுக்கு அது வேதனை அனுபவிச்சிருக்கணும்?
“இல்லடா அவனுக்கு பைத்தியமா இருக்கணும்?''
“முட்டாள்தனமா பேசாதே, அந்த பொண்ணப்பார்; அவ கண்ணப்பார்; எவ்வளவு பயம்; இவன் சரியான கொலைகாரனா இருப்பான். போதையில இருக்கும் போது கட்டி போலீஸ் ஸ்டேசனுக்கு கொண்டு போறாபோலிருக்கு''
எல்லாம் ரமேஷின் காதில் கேட்டது; புத்தி கிறுகிறுத்தது.
“தூ'' ஒரு பெரியவர் துப்பிய வெற்றிலை எச்சில் அவன் வலப்பக்க கன்னத்தில் மீசைக்கு மேல்புறம் ரத்த திட்டாய்வந்து உட்கார்ந்தது.
சிக்னல் கிடைத்ததும் சட்டென்றும் காரை கிளப்பினாள் அவள்.
ரமேஷின் மனசு தாங்கவில்லை.
என்ன அவமானம் ? நடந்தது தெரியாமல் நாலும் பேசுமா உலகம்?கண்ணால் பார்ப்பதற்கும் உண்மைக்கும் இடைவெளி இருக்கிறதா?அவமானம் அவனைப் பிடுங்கித் தின்னது.
“ஏங்க, கொஞ்சம் நிறுத்துங்க'' கெஞ்சினான்.
“கொஞ்சம் பொறுங்க''ஆபத்தில்லா இடத்தில் காரை நிறுத்தினாள்; கட்டுக்களை அவிழ்ந்தாள்.
“நன்றிங்க!''
“பச்ச்'' அலட்சியப்படுத்திய அவள்...
“வாழ்க்கையில தீனி தேடாதீங்க; திருப்தியை தேடுங்க; வர்றேன்''
சட்டென்று காரை கிளப்பி போக்குவரத்தில் கலந்தாள்.
`தாதாவின் மகள்; ஆனால் , தாதாபோல இல்லையே? அப்படியானால்... சங்கீதா... நடிகை பிரேமாவின் தப்புக்குசங்கீதா எப்படி பொறுப்பு? எந்தளவு பொறுப்பு? பிரேமாவின் கைதும் அவள் மார்க்கெட்டை வீழ்த்த மற்றவர்கள்சூழ்ச்சியாக இருக்கலாமே
'ரமேஷின் புத்தி யோசித்தது; புறப்பட்டான்; சங்கீதாவைப் போய் சந்தித்தான்.
“ஸாரிம்மா''எதுவும் பேசாமல் ஏறிட்டு பார்த்தாள் சங்கீதா.
“என்னை மன்னிச்சிடு; எம்புத்தி தெளிஞ்சிட்டது; என்னால ஏற்பட்ட காயத்த மறந்திடு; நம்ம கல்யாணம்நடக்கணும்; நடந்தே தீரும்''
ரமேஷ் சொன்னதும் கடகடவென்று சிரித்தாள் சங்கீதா.
"போடா, காதலுங்கறது மனசு தீர்மானிக்கிறது. அங்கே நல்லவ கெட்டவ பேதமில்ல; அன்பு ஒண்ணுதான் குறி.எப்ப புத்திக்கேத்தமாதிரி பேசறனுக்கு நீ தயாராயிட்டயோ, அப்பவே நம்ம காதலுக்கு நீ குட்பை சொல்லிட்டே.
ஆனா, நான் காதலுக்கு குட்பை சொல்லல; அது என் மனசுல எப்பவும் இருக்கும். ஏன்னா, அது அன்புலஆரம்பிச்சது; அதுலேயே வளர்ந்தது. ஆனா நம்ம கலயாணத்துக்கு குட்பை. ரெண்டு குடும்பத்தோட அன்பையும்ரெண்டு நிமிஷத்துல கெடுத்துட்டே; மயானத்துல இருந்து மறுபடியும் மணவறைக்கு வர விரும்பல போ''
சட்டென்று விசும்பத்தொடங்கினாள்.
“சங்கீதா, அது வந்து...''
“ச்சீ... போடா''கோபமாய் கதவைக்காட்டி கத்தினாள்.
அவள் கைகாட்டிய இடத்தில்...அவன் வீடியோ கேமரா இருந்தது.
1 comment:
flash news..........
Post a Comment